ஐபிஎல் வீரர் போட்ட சபதம்... சாதித்து காட்டிய சர்ஃபராஸ் கானின் தந்தை - உருக்கமான கண்ணீர் கதை!
Sarfaraz Khan Father Inspiring Story: ஐபிஎல் வீரர் ஒருவர் சர்ஃபராஸ் கானின் தந்தையிடம் போட்ட சபதம் நேற்று நிறைவேறியது. அந்த சபதம் என்ன, அதன் பின்னால் இருக்கும் உருக்கமான கதையை இங்கு காணலாம்.
Sarfaraz Khan Father Inspiring Story: இந்திய கிரிக்கெட்டுக்கே நேற்று ஒரு சிறப்பான நாள் எனலாம். இந்தியாவின் மிக உயர்ந்த முதல் தர தொடரான ரஞ்சி டிராபியில் கடந்த சில சீசன்களாகவே ரன்களை குவித்து வந்தவர் சர்ஃபராஸ் கான். ரஞ்சி டிராபியில் அத்தனை சாதனைகளை குவித்தாலும் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு மட்டும் சர்ஃபராஸ் கானுக்கு கொடுக்ப்படவே இல்லை. ஃபிட்னஸ், ஷார்ட் பால் வீக்னஸ் என பல காரணங்கள் சொல்லப்பட்டன, அவர் அணிக்குள் வராததற்கு...
இவை அனைத்தும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு அடித்து நொறுக்கப்பட்டன. டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெற்ற சர்ஃபராஸ் கான் நேற்றைய போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இந்திய அணியின் 311ஆவது வீரராக அறிமுகமான சர்ஃபராஸ் கான், அனில் கும்ப்ளேவிடம் இருந்து தனது இந்திய அணி தொப்பியை பெற்றார்.
ஒரே வாசகம்... ஓராயிரம் அர்த்தம்...
தொடர்ந்து, ராஜ்கோட் நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடுமே நேற்று உணர்ச்சிப் பெருக்கில் காணப்பட்டது. சர்ஃபராஸ் கானை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்த அவரின் தந்தை நௌஷத் கானின் புகைப்படம்தான் நேற்று அனைத்து பக்கமும் பரவி வந்தது. நௌஷத் கானின் டீசர்டிற்கு பின்புறத்தில் இடம்பெற்ற,"கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு" (Cricket is Everyone's Game) வாசகம் ஆயிரம் கதைகளை ஒரே வரியில் சொல்வதாக அமைந்ததுதான் சிறப்பு எனலாம்.
மேலும் படிக்க | இந்திய அணியில் சர்ஃபராஸ் கான்... ஆனந்த கண்ணீரில் தந்தை... டீ-சர்டில் அற்புத வாசகம்!
நௌஷத் கான் நேற்று முழுவதும் உணர்ச்சியின் உச்சியில்தான் இருந்தார். அவர் அடைந்த ஆனந்தத்தை அவரின் முகத்திலேயே நம்மால் பார்க்க முடிந்தது. தனது மகன் தான் ஆசைப்பட்ட இந்திய அணிக்காக விளையாடப் போகிறான் என்பது அவர் சர்ஃபராஸ் கானின் தொப்பிக்கு முத்தமிட்டபோதே நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.
"மும்பை கிரிக்கெட் லாபி"
செம கிளாஸாக விளையாடி தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட சர்ஃபராஸ் கான், நேற்று துரதிருஷ்டவசமாக ரன்அவுட்டான போது நௌஷத் கான் அதிருப்தி அடைந்தாலும், தனது மகன்தான் யார் என்பதை இந்த உலகின் முன் நிரூபித்துவிட்டான் என்ற கம்பீரத்துடன் எழுந்து, சர்ஃபராஸ் கானுக்கு கைத்தட்டிய போது தெரிந்தது. எல்லோரின் வெற்றிக்கு பின்னரும் ஒரு கதை இருக்கும். ஆனால், சர்ஃபராஸ் கானின் இந்த வெற்றிக்கதை அவருடையது மட்டுமில்லை, அடித்து பின்னுக்குத் தள்ளப்பட்டு நாளுக்கு நாள் ஒடுக்கப்படும் சமூக மக்களுக்கானது என்பதை உறுதியாக சொல்லலாம்.
மும்பை கிரிக்கெட் லாபி என பொதுவாக கூறப்படுவது உண்டு, அதாவது மும்பை வீரராக இருந்தாலே அவர் இந்திய அணிக்கு விளையாடிவிடுவார் என்பது. ஆனால், அதே மும்பையைச் சேர்ந்த சர்ஃபராஸ் கா்னுக்கு மட்டும் அந்த லாபி வேலை செய்யவில்லை என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் ஊடகம் ஒன்றுக்கு சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷத் கான் கொடுத்த நேர்காணலின் மூலம் அவர் ஏன் தனது மகன்கள் சர்ஃபராஸ் கான், முஷீர் கான் இருவரையும் இந்தியாவுக்கு விளையாட வைக்க வேண்டும் என நினைத்தார், அவர் இந்த நிலையை அடைய கடந்து வந்த பாதையை தெரிந்துகொள்ளலாம்.
நௌஷத் கான் - இக்பால் அப்துல்லா
அந்த நேர்காணலில் நௌஷத் கான் பேசும்போது,"நாங்கள் சேரிப்பகுதியில் வசித்தவர்கள். கழிவறைக்காக நீண்ட வரிசையில் காத்திருப்போம், அப்போது அங்கு எனது மகன்கள் அறைந்திருக்கிறார்கள், துரத்தியிருக்கிறார்கள். நாங்கள் எதுவும் இல்லாமல் வந்தோம், எதுவும் இல்லாமலேயே போவோம். சர்ஃபராஸ் ஒருமுறை என்னிடம்,'ஒருவேளை இது நடக்காவிட்டால் (இந்தியாவுக்கு விளையாடாவிட்டால்) என்ன செய்வது?' என்று. மீண்டும் டிராக் பாண்டை விற்க செல்வோம் என கூறினேன்" என்றார்.
மேலும், இவரின் வைராக்கியத்திற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் வீரர் இக்பால் அப்துல்லா. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இக்பாலின் விளையாட்டு திறனை இணங்கண்ட கிரிக்கெட் பயிற்சியாளரான நௌஷத் கான் அவரை மும்பைக்கு அழைத்து வந்து தன்னுடனே தங்கவைத்துள்ளார். நௌஷத் வீட்டிலேயே இக்பால் அப்துல்லா 7 வருடங்களாக வாழ்ந்துள்ளார். அங்கு அவருக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்துகொடுத்தார், நௌஷத் கான்.