ஐபிஎல் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் போட்டியின் 22-வது ‘லீக்’ ஆட்டம் இந்தூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.


‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி அம்லாவும், ஷான் மார்சும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் (5.5 ஓவர்) சேர்த்து ஓரளவு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஷான் மார்ஷ் 26 ரன்களில் (21 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு வந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 11 ரன்களில் (15 பந்து) வெளியேற்றப்பட்டார். 10 ஓவர்களில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டுக்கு 69 ரன்களே எடுத்திருந்தது.


இந்த சூழலில் அம்லாவுடன், கேப்டன் கிளைன் மேக்ஸ்வெல் இணைந்தார். அதன் பிறகு தான் ஆட்டம் சூடுபிடித்தது. மெக்லெனஹான் வீசிய ஆட்டத்தின் 15-வது ஓவரில் மேக்ஸ்வெல் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்களை திரட்டி பிரமாதப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அம்லா தனது பங்குக்கு, 16-வது ஓவரில் மலிங்காவின் பந்து வீச்சில் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். 2 ஓவர்களில் பஞ்சாப் அணி 50 ரன்களை சேகரித்ததால் ஸ்கோர் மளமளவென எகிறியது.


அணியின் ஸ்கோர் 163 ரன்களாக உயர்ந்த போது, மேக்ஸ்வெல் 40 ரன்களில் (18 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பும்ராவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஸ்டோனிஸ் 1 ரன்னில் நடையை கட்டினார்.


மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு ஆடிய அம்லா, கடைசி ஓவரில் மலிங்காவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை நொறுக்கி சதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட 2-வது சதம் இதுவாகும்.


20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. அம்லா 104 ரன்களுடன் (60 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார்.


பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடியது. இவர்களும் ரன்வேட்டையில் மிரள வைத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் பார்த்தீவ் பட்டேலும், ஜோஸ் பட்லரும், பஞ்சாப்பின் பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். இதனால் அந்த அணி இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் பயணித்தது.


இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் (5.5 ஓவர்) சேர்த்து பிரிந்தனர். பார்த்தீவ் பட்டேல் 37 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோஸ் பட்லருடன், நிதிஷ் ராணா கைகோர்த்து, பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஜோஸ் பட்லர் 77 ரன்களில் (37 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார்.


இதன் பின்னர் நிதிஷ் ராணா-ஹர்திக் பாண்ட்யா ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்தது. ராணா 62 ரன்களுடனும் (34 பந்து, 7 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 


மும்பை அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 5-வது வெற்றியாகும்.