ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மற்றும் குஜராத் லயன்ஸும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதில், கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா.


ஆனால் குஜராத் அணியோ இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.


கொல்கத்தா அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. கேப்டன் கெளதம் கம்பீர், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ் போன்றோர் அந்த அணியின் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சில் நாதன் கோல்ட்டர் நீல், டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம் போன்றவர்களும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சுநீல் நரேன், ஷகிப் அல்ஹசன் போன்ற வீரர்களும் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.


ஆனால் குஜராத் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பிரென்டன் மெக்கல்லம் தவிர எஞ்சிய அனைவரும் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே டுவைன் ஸ்மித், கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஆரோன் ஃபிஞ்ச், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக ஆடினால் மட்டுமே அந்த அணி பெரிய அளவில் ரன் குவிக்க முடியும். அந்த அணியின் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. 


இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா ஒரு முறையும், குஜராத் 2 முறையும் வெற்றி கண்டுள்ளன.


இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.