ஐபிஎல் 2017: விக்கெட் இழப்பின்றி வென்றது பஞ்சாப்
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங் செய்தது.
டெல்லி அணியின் சஞ்சு சாம்சன், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரிலேயே டெல்லி அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சந்தீப் ஷர்மா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் பில்லிங்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
அடுத்து கருண் நாயர் களம் இறங்கினார். 3-வது ஓவரின் 5-வது பந்தில் சஞ்சு சாம்சன் 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 5-வது ஓவரின் கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுக்களை சந்தீப் ஷர்மா வீழ்த்தினார்.
தொடக்கத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த டெல்லி அணி, அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. கருண் நாயர் (11), ரிஷப் பந்த் (3), கோரி ஆண்டர்சன் (18), கிறிஸ் மோரிஸ் (2), ரபாடா (11) அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவரில் 67 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது.
பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல், வருண் ஆரோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 68 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கிங்ஸ் லெவன் களமிறங்கியது.
மார்டின் கப்தில், ஹாஷிம் அம்லா இருவரும் துரத்தலை தொடங்கினர். அம்லா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய கப்தி பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்டு டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கப்தில் 50 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), அம்லா 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
9 லீக் ஆட்டத்தில் 4-வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டியில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.