IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மற்றொரு சோகம்... மேகக்கூட்டங்களுடன் வருகிறாரா வருணபகவான்?
IPL 2023 CSK vs LSG: சென்னை சேப்பாக்கத்தில், சென்னை - லக்னோ அணிகள் நாளை மோதும் நிலையில், மழை குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IPL 2023 CSK vs LSG Weather Forecast: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த 16ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இதுவரை மூன்று லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
குறிப்பாக, மும்பை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடைபெறும் நிலையில், அந்த போட்டியை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் நாளை (ஏப். 3) மோத உள்ளது. இப்போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதால், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக காணப்படுகின்றனர்.
குஜராத் அணியுடனான முதல் போட்டியில், சிஎஸ்கே தோல்வியடைந்தாலும், சிஎஸ்கே அணியும் தோனியும் நீண்ட நாள் கழித்து சென்னையில் விளையாடுவதே உற்சாகத்திற்கான முதன்மையான காரணம். மேலும், சேப்பாக்கம் சிஎஸ்கே அணியின் கோட்டை என்பதால், இந்த போட்டியில் வெற்றிபெற்று சிஎஸ்கே மிரட்டலான கம்பேக் கொடுக்கும் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
என்ன செய்யப்போகிறார் தோனி?
அந்த வகையில், முதல் போட்டியில் சொதப்பலாக விளையாடிய ஷிவம் தூபே, ராயுடு உள்ளிட்டோருக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும், பந்துவீச்சை பலப்படுத்தவும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சிற்கு ஆடுகளம் ஒத்துழைப்பு அளிக்கும் என்பதால், சான்ட்னர் அணியில் தொடரவே அதிக வாய்ப்புள்ளது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் கான்வே, ஸ்டோக்ஸ், மொயின் அலி, சான்ட்னர் விளையாடும்.
அந்த வகையில், கேப்டன் தோனி, பிளேயிங் லெவனில் மாற்றங்களை கொண்டு வருவாரா அல்லது தனது வழக்கமான பாணியான 'Stay With Process'- திட்டத்தை தொடர்வாரா என்பது நாளை டாஸ் போட்ட பின்னர்தான் தெரியும் தெரியும்.
மேகக்கூட்டங்களுடன் வருண பகவான்
இந்த கவலை ஒருபுறம் இருக்க, சிஎஸ்கே ரசிகர்களுக்கு மற்றொரு சோகச்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது. ஆம், நாளை ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் வருண பகவானும் தனது மேகக்கூட்டங்களுடன் சென்னை சேப்பாக்கத்தில் போட்டியை காண வர அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,"அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு தலைவலி
சென்னையில் இதுவரை மழை இல்லை என்றாலும், ஒருவேளை நாளை மழை பெய்துவிட்டால் மைதானத்தில் போட்டியை காண டிக்கெட் எடுத்த ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமின்றி, கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது.
சென்னை அணிக்கு, கைல் மேயர்ஸ், கேஎல் ராகுல், மார்க் வுட் என பல தலைவலிகள் வரிசைக்கட்டி நின்றாலும், வருண பகவானும் நாளை பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ