IPL 2023: கடைசி ஓவரில் கட்டுப்படுத்திய வருண் சக்ரவர்த்தி... ஹைதராபாத்திற்கு மோசமான தோல்வி!
IPL 2023 SRH vs KKR: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
IPL 2023 SRH vs KKR: ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்னடைவில் உள்ளதால், இன்றைய போட்டியை எதிர்நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால், இந்த முடிவு கொல்கத்தாவுக்கு பெரிதாக பயன்படவில்லை. குர்பாஸ் 0, வெங்கடேஷ் ஐயர் 7, ஜேசன் ராய் 20 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது ரிங்கு சிங்குடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் வீச ஸ்கோர் நன்றாக ஏறியது.
நடராஜன் ஆறுதல்
ராணா 42 ரன்களை எடுத்தபோது ஆட்டமிழக்க, ரஸ்ஸலும் சிறிதுநேரம் தாக்குபிடித்து 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரிங்கு சிங்கும் 46 ரன்களில் வெளயேற 20 ஓவர்களில் கொல்கத்தா அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரை அற்புதமாக வீசிய நடராஜன் ஒரு விக்கெட், ஒரு ரன் அவுட் என 3 ரன்களை மட்டும் கொடுத்தார். ஹைதராபாத் சார்பில் யான்சன், நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, மார்க்ரம், மார்க்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மேலும் படிக்க | ரிஷப் பண்டுக்கு மாற்று: சாம்சனும் இல்லை.... கிஷானும் இல்லை - இவர் தான்!
கிளேசன் - மார்க்ரம் ஜோடி
172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அகர்வால் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவர் மூன்றாவது ஓவரில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 9, திரிபாதி 20, ப்ரூக் 0 என அடுத்தடுத்து விக்கெட் சரிய கேப்டன் மார்க்ரம், கிளேசன் உடன் இணைந்து நிலைத்து நின்று ஆடினார். இந்த ஜோடி 50 ரன்களை எடுத்தபோது, கிளேசன் 36 ரன்களிலும், சிறிது ஓவர்களில் மார்க்ரம் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
வாட்டி எடுத்த வருண்
கடைசி கட்டத்தில் அப்துல் சமத் ரன்களை குவிக்க, 20ஓவது ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வருண் சக்ரவர்த்தி வீச வந்தார். முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், 3ஆவது பந்தில் அப்துல் சமத்தின் விக்கெட்டை கைப்பற்றினார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 166 ரன்களை மட்டும் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
புள்ளிப்பட்டியல்
கொல்கத்தா அணிக்கு, வைபவ் அரோரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் கான், ரஸ்ஸல், அன்குல் ராய், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். கடைசி ஓவரை மாஸாக வீசிய வருண் ஆட்டநாயகனாக தேர்வானார். கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், ஹைதராபாத் 6 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ