IPL 2023: ஆட்டத்தை மாற்றிய அர்ஷ்தீப் சிங்... மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி!
IPL 2023 MI vs PBKS: ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றிப்பெற்றது.
IPL 2023 MI vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது.
இந்த போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாம் கரன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து, பஞ்சாப் அணிக்கு ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். ஷார்ட் 11 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 10 ரன்களிலும், அதிரடி காட்டிய அதர்வா டைடே 29 ரன்களிலும் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி சற்று தடுமாறியது.
ஹர்பிரீத் சிங் பாட்டீயா - சாம் கரன் ஜோடி
ஆனால், அடுத்து வந்த ஹர்பிரீத் சிங் பாட்டீயா, கேப்டன் சாம் கரன் ஆகியோர் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக, அர்ஜூன் டெண்டுல்கரின் ஓவரில் 30 ரன்களை குவித்து அதிரடி காட்ட, ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி, 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பாட்டீயா 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சாம் கரனும் 55 ரன்களில் வெளியேற, ஜித்தேஷ் சர்மா கடைசி நேரத்தில் ரன்களை குவித்தார். அவர் 7 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உள்பட 25 ரன்களை எடுத்தார். இதன்மூலம், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்தது. மும்பை பந்துவீச்சில் கிரீன், சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இஷான் ஏமாற்றம்
215 ரன்கள் என்ற மாபெரும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு, இஷான் கிஷன் பெரும் அதிர்ச்சியை அளித்தார். அவர் அர்ஷ்தீப் வீசிய 2ஆவது ஓவரில், 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு ஓப்பனரான ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 27 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார்.
கிரீன் - சூர்யகுமார்
இதையடுத்து, கிரீனும், சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ரன்களை குவித்தனர். கிரீன் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 43 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என 26 பந்துகளில் 57 ரன்களை எடுத்து 18ஆவது ஓவரில் ஆட்டமிழக்க மும்பை அணிக்கு அழுத்தம் அதிகரித்தது.
அசத்திய அர்ஷ்தீப்
களத்தில் திலக் வர்மா, டிம் டேவிட் என இரண்டு பெரிய ஹிட்டர்கள் இருந்ததால் ஆட்டம் மும்பை சாதகமாக இருப்பதாக பார்க்கப்பட்டது. கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. நாதன் எல்லீஸ் வீசிய 19ஆவது ஓவரில் 15 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன.
இரண்டு ஸ்டிக்கள் உடைந்தது
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டிம் டேவிட் 1 ரன் எடுக்க, அடுத்த பந்தில் திலக் வர்மா ரன் ஏதும் அடிக்கவில்லை. தொடர்ந்து, மூன்றாவது பந்தில் திலக் வர்மாவும், நான்காவது பந்தில் இம்பாக்ட் பிளேயராக வந்த வதீராவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இரண்டு பந்துகளும், மிடிஸ் ஸ்டெம்பை பதம் பார்த்தன. குறிப்பாக, இரண்டு பந்துகளாலும் இரண்டு முறை மிடிஸ் ஸ்டிக் உடைந்தன.
தொடர்ந்து, 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
புள்ளிப்பட்டியல்
புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் அணி 7 போட்டிகள் விளையாடி (4 வெற்றி, 3 தோல்வி) 8 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி (4 வெற்றி, 3 தோல்வி) என 6 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ