ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.


தொடக்க ஆட்டத்தில் கவுகாத்தி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டரை வீழ்த்தியது. சென்னையின் எப்.சி.- அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதிய 2-வது ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. 3-வது ஆட்டத்தில் மும்பை 1-0 என்ற கோல் கணக்கில் புனே அணியையும், நேற்று நடந்த 4-வது போட்டியில் கவுகாத்தி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியையும் வீழ்த்தின. 5-வது லீக் ஆட்டம் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு கேரளா பிளாஸ்டர்ஸ்- அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின. அதில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ்சை வீழ்த்தியது.


இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை சந்திக்கிறது.


சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. இந்த சீசனில் டெல்லி அணியின் தனது முதல் ஆட்டத்தை சந்திக்கிறது. எனவே இந்த போட்டி தொடரில் வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் தயாராக இருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.