மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன. அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் (16 ரன்) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூ.க்கு இரையானார். தொடர்ந்து லோகேஷ் ராகுல் 38 ரன்னிலும், புஜாரா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.


இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரஹானேவும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். 17 ரன்னில் இருந்த போது கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ரஹானே 48 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி இருக்க வேண்டியது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தாததால் ரஹானே தப்பிபிழைத்தார். நிதானமாக ஆடிய இருவரும் தங்களது அரைசதத்தை கடந்தனர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.


இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். வந்த வேகத்திலேயே கேப்டன் விராட் கோலி (51 ரன்) பெவிலியன் திரும்பினார்.


இதையடுத்து ரஹானேவுடன், ஹனுமா விஹாரி ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்கள் சேகரித்ததுடன், முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வலுவான நிலையை நோக்கி பயணித்தது. அபாரமாக ஆடிய ரஹானே தனது 10-வது சதத்தை எட்டினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ரஹானே 102 ரன்னில் கேட்ச் ஆனார். 7 ரன்னில் கன்னி சதத்தை நழுவ விட்ட விஹாரி 93 ரன்களில் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். ரிஷாப் பண்ட் 7 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.


இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவு அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 100 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


பும்ரா ஏழே ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்து மேற்கிந்திய தீவு அணியை திணறடித்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.