Jay Shah Elected As ICC Chairman: சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கெளரவ செயலாளராகவும், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் ஜெய் ஷா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஐசிசியின் தலைவராக வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐசிசியின் தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே தொடர்ந்து இரண்டு முறை இந்த பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாக அவர் போட்டியிடாத நிலையில், ஜெய் ஷா மட்டுமே தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்றும் ஐசிசி வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்...
ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், உலகம் முழுவதும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவது குறித்தும், அதை நோக்கிய முன்னேற்றத்திற்கான தனது நோக்கத்தை குறித்தும் வெளிப்படுத்தினார். குறிப்பாக, 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதன் மூலம் அதன் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய வாய்ப்பாக ஜெய் ஷா கருதுகிறார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம்'
ஐசிசி தலைவராக தேர்வான பின்னர் ஜெய் ஷா,"சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டதன் தாழ்மையுடன் ஏற்கிறேன். கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்கும் வகையில் ஐசிசி குழுவுடனும் மற்றும் ஐசிசியின் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் உறுதி ஏற்றுள்ளேன்.
கிரிக்கெட்டின் பல வடிவங்களை சமநிலையுடன் நடத்துவதிலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களை நோக்கி நகர்வதிலும், உலகளாவிய சந்தைகளில் நமது முக்கிய நிகழ்வுகளை கொண்டுசென்று அறிமுகப்படுவதிலும் என நாம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் இருக்கிறோம். முன்னெப்போதையும் விட கிரிக்கெட்டை இன்னும் உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதும், பிரபலமாக்குவதுமே எங்களின் நோக்கம் ஆகும்.
கற்ற மதிப்புமிக்க பாடங்கள் மூலம் நாம் முன்னேறுவோம். அதே வேளையில், உலகளவில் கிரிக்கெட் மீதான ஈர்ப்பை அதிகரிக்க புதிய சிந்தனை மற்றும் புதுமைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நமது விளையாட்டைச் சேர்ப்பது, கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது. மேலும் இது கிரிக்கெட்டை முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளம் ஐசிசி தலைவர்
35 வயதில் ஜெய் ஷா தேர்வாகியிருப்பதன் மூலம், இளம் வயதில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற பெருமையை அவர் பெறுகிறார். மேலும், ஜெய் ஷா ஐசிசி தலைவராக தேர்வாகியிருக்கும் ஐந்தாவது இந்தியர் ஆவார். இதற்கு முன், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் உள்ளிட்டோர் இதற்கு முன் ஐசிசியின் தலைவராக இருந்துள்ளனர்.
ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்றே கடைசி நாளாக கூறப்பட்டது. இன்று வரை ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் போட்டியிட விண்ணப்பிக்காததால் அவர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். ஒருவேளை தேர்தல் நடைபெற்றிருந்தால், ஜெய் ஷாவுக்கு ஐசிசியில் மொத்தம் உள்ள 16 நாடுகளில் 9 நாடுகளின் வாக்குகள் தேவைப்பட்டிருக்கும். ஜெய் ஷா ஏற்கெனவே, ஐசிசியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவர் ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்கள் (F&CA) என்ற துணைக் கமிட்டியிலும் பணியாற்றுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது ஒரு சக்திவாய்ந்த துணைக் கமிட்டியாக பார்க்கப்படுகிறது.
அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?
மேலும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளர் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் எனலாம். பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டம் அடுத்த மாதம் அல்லது அக்டோபரில் நடைபெறும் என கூறப்படுகிறது. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவர் ரோகன் ஜெட்லி புதிய பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், அதனை அவர் முற்றிலும் நிராகரித்துள்ளார். எனவே யார் பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்பார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ