லோதா குழு: நியூசிலாந்துக்கு தொடர் நடப்பதில் சிக்கல்?
லோதா குழு நடவடிக்கை காரணமாக நியூசிலாந்து தொடர் நடப்பதில் சிக்கல்.
சுப்ரீம் கோர்ட் அமைத்த லோதா குழு பி.சி.சி.ஐ.,யில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ., இதனை நிறைவேற்ற இதுவரை தயக்கம் காட்டி வருகிறது. இதனையடுத்து பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்களை பி.சி.சி.ஐ., நிறைவேற்றவில்லை, எனவே பொறுப்பில் உள்ளவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் லோதா குழு கூறியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ.,க்கு நிதி பரிவர்த்தணைக்கும் பணம் வழங்க வேண்டாம் என பி.சி.சி.ஐ., கணக்கு வைத்துள்ள அனைத்து வங்கிகளுக்கும் லோதா குழு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் பி.சி.சி.ஐ., செயலாளர் அஜய் ஷிர்கே மற்றும் பொருளாளர் அனிருத் சவுத்ரிக்கும் அனுப்பியுள்ளது.
இதனால் நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து நாள் தொடர்கள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில்:- லோதா குழுவின் தலையீடு அதிகமாக உள்ளது. வீரர்கள் சம்பளம் இல்லாமல் விளையாடினால் மட்டுமே, அடுத்த போட்டியை நடத்த முடியும். வரும் 8-ம் தேதி 3-வது டெஸ்ட் இந்தூரில் துவங்க உள்ளது. இப்போட்டி நடைபெற மத்திய பிரதேஷ் மாநிலம் பணம் வழங்க வேண்டியுள்ளது. ஆனால் கடிதம் காரணமாக போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தன.
இது தொடர்பாக லோதா குழு அதிகாரி அளித்த பேட்டியில் கூறியதாவது:- பி.சி.சி.ஐ.,யின் குற்றச்சாட்டுகள் தவறு. போட்டி நடத்த கொடுக்கப்படும் பணத்துக்கு தடை செய்ய வேண்டும் என நாங்கள் கூறவில்லை. ஐ.பி.எல்., போட்டிகளுக்கு கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று கூறினார்.