Kanpur Test: மும்மூர்த்திகளை சமாளிக்குமா நியூசிலாந்து - எதிர்பார்ப்பில் 5வது நாள்
கான்பூர் டெஸ்ட் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கப்போகும் 5வது நாள் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளோர் செய்தது. ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது. ஆனால், மிடில் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர், முதல் இன்னிங்ஸில் சதமடித்ததுபோலவே இந்த இன்னிங்ஸிலும் நிதானமான ஆட்டத்தை விளையாடி அரைசதமடித்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து, 2வது இன்னிங்ஸில் அரைசதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் கவுரமான ஸ்கோரை இந்திய அணி எட்டியது.
ALSO READ Kanpur Test: நியூசிலாந்து அணி அபாரம் - இந்தியா தடுமாற்றம்
பின்வரிசையில் களமிறங்கிய அஷ்வின், சகா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 32 ரன்கள் எடுத்த அஸ்வின், ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கழுத்து வலியால் அவதிப்பட்டு வரும் விருதிமான் சஹா, மிகவும் பொறுமையாக விளையாடி அரைசதமடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த அக்ஷர் படேலும் சிறப்பாக விளையாடினார். 81 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்திய அணி டிக்ளோர் செய்வதாக அறிவித்தது. சகா 61 ரன்களுடனும், அக்ஷர் படேல் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தியா டிக்ளோர் செய்ததால் நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் வில் யங், 2 ரன்கள் எடுத்திருந்தபோது, அஷ்வின் பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வில்லியம்சன் களம் புகுந்தார். நியூசிலாந்து அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்திருந்தபோது இன்றைய ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. பரபரப்பான 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 280 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கின்றன. இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், நியூசிலாந்து அணியின் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா என மூன்று பேரும் சுழற்பந்துவீச்சில் ஜொலிப்பதால், அவர்களை எதிர்கொள்வது நியூசிலாந்து அணிக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். இந்தியாவில் எந்தவொரு அணியும் இதுவரை 276 ரன்களுக்கு மேல் 4வது இன்னிங்ஸில் சேஸ் செய்து வெற்றி பெற்றதில்லை. அந்த சாதனையை நியூசிலாந்து முறியடிக்குமா? அல்லது இந்திய அணி அந்த சாதனையை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்புக்கு இடையே 5வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.
இதனிடையே, இந்திய அணி வீரர் அஸ்வின், வில் யங்கின் விக்கெட்டை எடுத்ததும், டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை எடுத்திருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை சமன் செய்தார். இன்னொரு விக்கெட்டை எடுத்தால், இந்திய பந்துவீச்சாளர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 3வது இடத்துக்கு முன்னேறுவார்.
ALSO READ என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்டியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR