இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராகும் முத்தையா முரளிதரன்!
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்க உள்ளார் என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது!
கொழும்பு: இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்க உள்ளார் என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது!
இந்த மாத தொடக்கத்தில் பொறுப்பேற்ற லங்கா ஜனாதிபதியின் புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ள மூன்று புதிய ஆளுநர்களில் இவரும் ஒருவராக இருப்பார் என கூறப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு முரளிதரனை ஜனாதிபதி ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைத்ததாக டெய்லி மிரர் வட்டாரங்களை மேற்கோளிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும், அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாண ஆளுநராகவும், திஸ்ஸா விதானா வட மத்திய மாகாண ஆளுநராகவும் பொறுப்பேற்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அனுராதா யஹம்பத் தேசியவாத தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவராகவும் புகழ்பெற்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
திஸ்ஸா விதானா முன்னாள் அமைச்சரும், லங்கா சம சமாஜா கட்சியின் தலைவருமானவர். அவர் நீண்ட காலமாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்தார், மேலும் வைரஸ் நோய்கள் குறித்த சிறப்பு மருத்துவராகவும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான போது முத்தையா முரளிதரன், கோட்டபய ராஜபக்ஷ-க்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தார். மேலும், 2009-ல் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முரளிதனின் இந்த கருத்து இலங்கை தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், இதுகுறித்து தெரிவிக்கையில்., சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் அத்தரணத்தில் அவர்கள்அப்பாவிகளை கொலை செய்தனர். எனவே முடிவிற்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக தான் கருதுவதாக குறிப்பிட்டார்.
இரு தரப்பும் தவறிழைத்தன, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். ஆனால் அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர், விடுதலை புலிகள் தங்கள் வாய்ப்பை தவறவிட்டதால் தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.