நரசிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் தடை : வாடா
இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது. அவர் 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 'வாடா' தடை விதித்துள்ளது.
கடந்த 2015-ல் இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் 74 கி.கி., பிரிவில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.
கடந்த ஜூனில் நடத்தப்பட்ட சோதனையில் 'மெட்டாடியனன்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. ஆனால், 'சக ஜூனியர் வீரர் செய்த சதி செயல்' என நரசிங் வாதாட, தேசிய ஊக்க மருந்து சோதனை மையமான நாடா இவரை விடுவித்தது.
ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள இவர் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில் நாடாவின்' முடிவை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் ('வாடா') எதிர்த்தது. நரசிங் பங்கேற்பு குறித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இந்நிலையில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த விசாரணையில், நரசிங் சார்பில் வழக்கறிஞர் விடுஸ்பத் சிங்கானியா வாதாடினார். விசாரணையின் முடிவில் நரசிங்கிற்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதித்து 'வாடா' உத்தரவிட்டது. இதனால் நரசிங்கின் ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது. மேலும் நரசிங் யாதவ் ரியோவிலிருந்து இந்தியா திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.