2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வென்ற நியூசிலாந்து அணி, தொடரையும் 0-2 என்ற கணக்கில் வென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா 242 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லாதம் ஆடி அரை சதமடித்தார். கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்னில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.  இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவரில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியாவை விட 7 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


அடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் 3 ரன்னிலும், பிரித்வி ஷா 14 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் விராட் கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகானே 9 ரன்கள், புஜாரா 24 ரன்கள் என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 


இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது.