ஒலிம்பிக்: பேட்மின்டன் இறுதிச்சுற்று
ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார் 21 வயதாகும் பத்ம ஸ்ரீ பி.வி.சிந்து. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரத்தில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானின் நொஜொமி ஒக்குஹராவை நேர் செட்டுகளில் வீழ்த்தி இறுதிசுற்றில் நுழைந்தார் பி.வி சிந்து. இந்தியர் ஒருவர் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதன் முறை ஆகும்.
பி.வி சிந்துவும் நொஜோமியும் மோதிய முதல் சுற்று கடுமையான போட்டியில் முடிந்தது. ஆரம்பத்தில் சறுக்கினாலும் பின்னர் நொஜோமி கடும் சவாலை அளித்தார். 21-19 என்ற செட் கணக்கில் முதல் செட்டை பி.வி.சிந்து வென்று முடிக்க அரங்கம் அதிர்ந்தது.
இரண்டாவது சுற்றில் ஆரம்பத்தில் நொஜோமி மிகச்சிறப்பாக விளையாடினார். எந்தவித பதட்டமும் இல்லாமல் அவர் விளையாடிய விதத்தை பார்க்கும்போது இந்த செட் மிகவும் பரபரப்பாக போகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். 11 -10 என்ற நிலையில் இருந்து அடுத்த பத்து புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் சிந்து. முடிவில் 21-10 என இரண்டாவது செட்டையும் கைப்பற்ற டிவியில் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை இந்தியர்களும் உணர்ச்சி வசமானார்கள்.
இதுவரை இந்தியா சார்பாக நான்கு பெண்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே வெண்கலம் வென்றார்கள். ஆனால் சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதையடுத்து முதல் பெண்மணியாக தங்கம் அல்லது வெள்ளியை வெல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
பி.வி ரமணா மற்றும் பி.விஜயா தம்பதிகளுக்கு மகளாக 1995-ம் ஆண்டு பிறந்தவர் தான் இந்த சிந்து. பெற்றோர் இருவருமே வாலிபால் வீரர்கள். எட்டு வயதில் இருந்து பேட்மிட்டன் விளையாடி வரும் சிந்துவின் உழைப்புக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.
பி.வி சிந்து இறுதிச்சுற்றில் வெள்ளி பதக்கம் வென்றால் ஐந்து கோடி பரிசும், தங்கம் வென்றால் எட்டு கோடி பரிசும் காத்திருக்கிறது. ஆனால் இந்த பரிசுகளை தாண்டி மக்களின் பேராதரவு எனும் விலை மதிப்புமிக்க விஷயம் சிந்துவுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இந்தியா போன்றதொரு நாட்டில் இருந்து அதுவும் ஒரு பெண்மணி ஒலிம்பிக்கில் வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் போது பல கோடிக்கணக்கான பெண்களுக்கு பெரும் உத்வேகம் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பைனலில் சிந்து உலகின் ‛நம்பர் 1' வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரினை எதிர்கொள்கிறார்.