ஐபிஎல் 2022 - லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணிக்கு பட்லரும், ஜெய்ஸ்வாலும் தொடக்கம் தந்தனர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
சாம்சனும், ஜெய்ஸ்வாலும் அதிரடியாக ஆட ராஜஸ்தான் அணி பவர் பளே முடிவதற்குள்ளேயே 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய சாம்சன் 32 ரன்களிலும், ஜெஸ்வால் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு ரியான் பராக்கும், தேவ்தத் படிக்கலும் ஜோடி சேர்ந்தனர்.இந்த ஜோடியும் அதிரடியாகவே ஆடியது.இருப்பினும் தேவ்தத் படிக்கல் 18 பந்துகளில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து நீஷம் க்ரீஸுக்கு வந்தார். பராக்கும், நீஷமும் தேவைப்பட்ட நேரத்தில் அதிரடியாக ஆடினர். சிறிது நேரம் நிலைத்த பராக் 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பராக்கை அடுத்து கடந்த போட்டியில் அரைசதம் அடித்த அஷ்வின் களம் புகுந்தார். ஆனால் அவர் வந்தவுடன் அஷ்வின் - நீஷம் இடையே நடந்த குழப்பத்தால் நீஷம் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இறுதி சமயத்தில் அஷ்வினும், போல்ட்டும் சிறிது அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ராகுலும், டிகாக்கும் தொடக்கம் தந்தனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிகாக் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த பதோனி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து ராகுலும், தீபக் ஹூடாவும் ஜோடி சேர்ந்தனர். ப்ர்சித் கிருஷ்ணா வீசிய ஆறாவது ஓவரில் அட்டகாசமான சிக்ஸ் அடித்த ராகுல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர் வெளியேறியதை அடுத்து க்ருனால் பாண்டியா களமிறங்கினார்.
அதன் பிறகு க்ருனால் பாண்டியாவும், தீபக் ஹூடாவும் ராஜஸ்தான் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இதனால் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. இருப்பினும் தேவைப்பட்ட நேரத்தில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடி 50 ரன்களை சேர்த்தது. அணியின் ஸ்கோர் 94ஆக இருந்தபோது அஷ்வின் ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று 25 ரன்களில் க்ருனால் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | RIP Symonds: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவஞ்சலி
அவருக்கு அடுத்ததாக தீபக் ஹூடாவுடன் ஸ்டாய்னிஸ் இணைந்தார்.பொறுப்பாக விளையாடிய தீபக் ஹூடா ஐபிஎல்லில் தனது 7ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.
லக்னோ ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்த தீபக் ஹூடா 17ஆவது ஓவரில் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஹோல்டரும் வந்த வேகத்திலே வெளியேற ஒட்டுமொத்த பொறுப்பும் ஸ்டாய்னிஸ் தோளுக்கு சென்றது.
ஆனால் ஹோல்டருக்கு பிறகு வந்த யாரும் சோபிக்காததாலும், தேவையான ரன் விகிதம் அதிகம் சென்றதாலும் ஸ்டாய்னிஸால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. அவரும் 27 ரன்களில் வெளியேற லக்னோவின் தோல்வி உறுதியானது. இறுதியாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR