ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்வதுடன் தங்கள் நல்ல நடத்தை மூலமாக மற்றவர்களின் இதயத்தையும் வெல்வார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 119 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக டெல்லியில் நேற்று ‘ரன் ஃபார் ரியோ’என்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது. பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மாரத்தானில் கலந்துகொண்டு ஓடினர். டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் தொடங்கிய இந்த ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 119 வீரர்களும் தங்கள் கடின உழைப்பால் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பின்னால் 125 கோடி இந்தியர்கள் இருப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்தியா தனது 70-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தருணத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் ரியோ நகரில் இந்தியாவின் வெற்றிக்கொடியை பறக்கவிட வேண்டும். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்வதுடன் தங்களின் நல்ல நடத்தை மூலமாக மற்றவர்களின் இதயத்தையும் வெல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் இந்திய கலாச்சாரத்தையும் அவர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள் என்று நம்புகிறேன்.


நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளே ஆவதால் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக போதிய நேரம் கிடைக்கவில்லை. 2020-ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு 200 வீரர்களுக்கு மேல் அனுப்புவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவோம். இதற்காக விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.


ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்புதான் போட்டி நடக்கும் இடத்துக்கு இந்திய வீரர்கள் அனுப்பப்படுவார்கள். இந்த முறை 15 நாட்களுக்கு முன்பே வீரர்களை அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு இந்திய உணவுகள் கிடைக்கச் செய்வதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளோம். வீரர்களின் தேவை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ற உணவு வழங்கப்படும். ஒவ்வொரு வீரர்களின் பயிற்சிக்காகவும் தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு 100 டாலர்களும், வீரர்களுக்கு அதில் பாதியும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஒலிம்பிக்கில் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதே தொகை வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது என பிரதமர் மோடி பேசினார்.