ஒலிம்பிக்: சாக்சிக்கு குவியும் மத்திய, மாநில விருதுகள்
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கிற்கு விருதுகள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு மட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகளும் அவருக்கு விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
சாக்சிக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சாக்சி இதுவரை அர்ஜூனா விருதுகள் ஏதும் பெறவில்லை என்ற போதிலும் நேரடியாக அவருக்கு கேல் ரத்னா விருது வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. கேல் ரத்னா விருதுக்கு ஏற்கனவே ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கி சுடும் வீரர் ஜிது ராய் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாக்சிக்கு அரசு வேலையும் ரூ.2.5 கோடி பரிசும் வழங்க உள்ளதாக அரியானா அரசு அறிவித்துள்ள நிலையில், அவருக்கு ராணி லட்சுமி பாய் விருது வழங்க உள்ளதாக உ.பி., முதல்வர் அகிலேஷ் அறிவித்துள்ளார். இந்த விருது, ராணி லட்சுமி பாய் உருவம் பொறித்த வெண்கல விருதுடன், ரூ.3.11 லட்சம் பரிசும் கொண்டதாகும்.