உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார். 25 மீ., ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ராகி சர்னோபட் தங்கப் பதக்கம் வென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெர்மனியின் முனிக் நகரில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய 17 வயது சவுரப் சவுத்ரி, ரிஸ்வி ஷாஜர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அபிஷேக் 32-வது இடம் பிடித்தார்.


இறுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்ட சவுரப் சவுத்ரி, 246.3 புள்ளிகள் பெற்று தனது முந்தைய உலக சாதனையை (245.0) முறியடித்து, தங்கம் கைப்பற்றினார். ரிஸ்வி (177.6) 5-வது இடம் பிடித்தார்.


பெண்களுக்கான 25 மீ., ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராகி சர்னோபட், மானு பாகர் 4 மற்றும் 5-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இறுதி சுற்றில் அசத்திய ராகி, 50-க்கு 37 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்க பதக்கம் கைப்பற்றினார்.  தொடர்ந்து 2020, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார். 
முன்னதாக 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபுர்வி சண்டேலா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.


இதுவரை 3 தங்கம் வென்ற இந்திய அணி, பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா (1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) இரண்டாம் இடத்தில் உள்ளது.