ஒருநாள் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றார் முன்னாள் கேப்டன்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷோயப் மாலிக், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷோயப் மாலிக், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்!
நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷோயப் மாலிக், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் தொடர்ந்து டி20 போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்விகண்ட பின்னர், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷோயப் மாலிக் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானார்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பிடிக்கவில்லை. பாகிஸ்தான் சார்பில் 287 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள மாலிக், 33.55 சராசரியில் 7534 ரன்களை குவித்துள்ளார். அதேபோல 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்களை விளாசியுள்ளார்.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடருடன் தான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷோயப் மாலிக் அறிவித்தார். தனது அறிவிப்பை அடுத்து தற்போது வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து தனது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள ஷோயப் மாலிக் இதுகுறித்து தெரிவிக்கையில்., "ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை எப்போதும் நான் விரும்பினேன். இதில் ஓய்வு பெறுவது வருத்தம்தான். ஆனால், என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து டி20 போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்த உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து ட்விட்டரில் ஷோயப் மாலிக் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்றுடன் நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றேன். இதுவரை என்னுடன் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நன்றி. என்னை கோச் செய்த பயிற்சியாளர்களுக்கு, குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு, ஊடகங்களுக்கு, ஸ்பான்சர்களுக்கு நன்றி. இவை எல்லாவற்றையும்விட எனது ரசிகர்களுக்கு நன்றி” என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.