Indian Open பேட்மிண்டன் தொடரிலிருந்து சாய்னா நேவால் விலகல்!
உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து சாய்னா நேவால் விலகியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து சாய்னா நேவால் விலகியுள்ளார்.
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி வருகின்றன 26-ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. மொத்தம் ரூ.2.4 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டித் தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதியின் போது வயிற்று கோளாறினால் துடித்து போன சாய்னா நேவால் அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அடுத்து சுவிஸ் ஓபன் தொடரில் ஆட இருந்த நிலையில், வயிற்று வலி காரணமாக அவர் ஆடவில்லை. பின்னர் இந்தியா வந்து பரிசோதித்த போது குடல் மற்றும் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்திய ஓபனில் தன்னால் ஆட இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா ஓபன் தொடரில் சாய்னா மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பிவி சிந்து மட்டுமே இந்தியா ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உள்ளார். அவரும் இந்தியா ஓபன் தொடரை முன்பு வென்றுள்ளதால், இந்த முறையும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.