ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா-சிபாபா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் ஜிம்பாப்வே சேர்த்தது. ஜிம்பாப்வே அணி கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியத் தரப்பில் ஜஸ்பிரீத் பூம்ரா 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அதிர்ச்சித் தொடக்கம்: பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டிரிப்பானோ வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே போல்டானார் கே.எல்.ராகுல். இதையடுத்து மன்தீப் சிங்குடன் இணைந்தார் அம்பட்டி ராயுடு. இந்த ஜோடி 5.4 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்தது. ராயுடு 16 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, மன்தீப் சிங் 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதனால் 7.4 ஓவர்களில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.


இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முஸாரபானி வீசிய 18-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாச முயன்ற பாண்டே, டிரிப்பானோவிடம் கேட்ச் ஆனார். அவர் 35 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்தார்.


கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 19-வது ஓவரில் அக்ஷர் படேல் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.மட்ஸிவா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் படேல் ஆட்டமிழந்தார். 3-வது பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க,அடுத்த பந்தை வீணடித்த ரிஷி தவன், 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.


கடைசிப் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் தோனி ஒரு ரன் மட்டுமே எடுக்க, இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஜிம்பாப்வே 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 


சிகும்பரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யபப்பட்டார்.