டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது.
பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ரன்னில் வெற்றி பெற்றது. சேப்பாக் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.
தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் முதல் தோல்வி ஆகும். அந்த அணியின் தொடர் வெற்றிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் தலைவன் சற்குணம் நிருபர்களிடம் கூறியதாவது:- திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.தொடக்க ஜோடி 144 ரன் குவித்த பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அதிரடியாக விளையாடும் போது விக்கெட்டுகள் விழுவது வாடிக்கையானதே. எங்கள் அணியின் பேட்டிங்கில் எந்த பிரச்சினையும் இல்லை. மிகுந்த பலத்துடனே உள்ளோம். எளிதில் ஆட்டம் இழந்த வீரர்களும் ஏற்கனவே திறமையை நிரூபித்தவர்கள் எனவே பேட்டிங் வரிசை பற்றி எந்தவித கவலையும் இல்லை என அவர் கூறினார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ஆர். அஸ்வின் கூறியதாவது:-நான் ஆட்டத்தை நிறைவு செய்து இருக்க வேண்டும். ஆனால் அது முடியாமல் போனது. பந்துவீச்சு எங்கள் அணியின் பலம். அதனை வெளிப்படுத்தி இருக்கிறோம். பேட்டிங்கில் எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு செய்து இருக்கிறோம். எங்கள் அணி வீரர்கள் திறமையாக விளையாடினார்கள், ஷாட்டுகள் நன்றாக இருந்து 100 சதவீத செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.