டி20 உலகக்கோப்பை : தமிழில் திட்டம் தீட்டி விக்கெட் எடுத்த யுஏஇ வீரர்கள் - யார் அவர்கள்?
டி20 உலகக்கோப்பை தொடரில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுஏஇ வீரர்கள் இரண்டு பேர் தமிழில் உரையாடி விக்கெட் வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று (அக். 16) தொடங்கியது. இந்த சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் 'ஏ' பிரிவிலும், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 'பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
'ஏ' பிரிவில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவின் கீலாங் நகரின் சைமண்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் - நெதர்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நெதர்லாந்து அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகம் அணி, நெதர்லாந்துக்கு 112 ரன்களையே இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும், 112 ரன்களை நெதர்லாந்து கடைசி ஓவர் வரை எடுத்து சென்றுதான் ஜெயித்தது. இப்போட்டியில், நெதர்லாந்து பந்துவீச்சாளர் பாஸ் டி லீடே மூன்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதில், ஐக்கிய அரபு அமீரகம் அணியில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இரண்டு வீரர்கள் விளையாடுகின்றனர். பந்துவீச்சாளர் மெய்யப்பன் திருச்சியை சேர்ந்தவர் என்றும், விக்கெட் கீப்பர் அரவிந்த் சென்னை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இப்போட்டியின் போது, மெய்யப்பன், அரவிந்த் ஆகியோர் தமிழில் உரையாடி, திட்டம்போட்டு நெதர்லாந்து வீரரின் விக்கெட்டை எடுத்ததாக ட்விட்டரில் பலரும் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பந்துவீச்சின் போது, 9ஆவது ஓவரை வலதுகை சுழற்பந்துவீச்சாளரான மெய்யப்பன் வீசினார். அப்போது, பாஸ் டி லீடே, ஆக்கர்மான் ஆகிய பேட்டர்கள் களத்தில் இருந்தனர். அதில், பாஸ் டி லீடேவிற்கு லெக் ஸ்பின் வீசுமாறும், ஆக்கர்மானுக்கு கூக்ளி டெலிவரியை வீசும்படியும் விக்கெட் கீப்பர் அரவிந்த், மெய்யப்பனுக்கு அறிவுறுத்தினார். இது, ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதன்படியே, மெய்யப்பனும் பாஸ் டீ லீடேவிற்கு லெக் ஸ்பின் (Outside the off Stump) வீசிய நிலையில், அவர் கேப்டன் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதுகுறித்து சிலர் ட்விட்டரில் பதிவிட்டும் வருகின்றனர்.
முன்னதாக, அதே மைதானத்தில், இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு இலங்கை - நமீபியா அணிகள் மோதின. இதில், நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியை கதறவிட்டது. நெதர்லாந்து அணி, நமீபியா அணியுடனும், இலங்கை அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியுடனும் அடுத்தடுத்தப் போட்டிகளில் மோத உள்ளன. இவ்விரு போட்டிகளும் நாளை மறுதினம் (அக். 18) நடைபெறுகிறது.
மேலும் படிக்க | T20 World cup: ரோகித் சர்மாவுக்கு பந்துவீசிய 11வயது இளம் சிறுவன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ