விராட் கோலியைக் குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், உங்களிடம் சிறப்பான திறமை இருப்பதாக தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே நான் மிகவும் ரசிப்பேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவால் கடும் கோபத்திற்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இதுக்குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், “ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் அப்படி ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே நான் மிகவும் ரசிப்பேன் என அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.


இதற்கு என்னுடைய பதில் என்னவெனில், இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்?. நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை” என்று விராட் கோலி அந்த ரசிகருக்கு பதில் அதே வீடியோவில் பதில் அளித்துள்ளார். 


இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டின் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்துக்கொண்டு, இப்படி ரசிகர்களை பார்த்து கூறுவது ஏற்புடையது அல்ல என்பதையும், பல வெளிநாட்டு விளம்பரங்களில் நடித்தும் வருமானத்தை ஈட்டி வருகிறார் என்பதையும் விராட் கோலி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


இந்நிலையில் விராட் கோலியின் கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது. அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா? என எதிர் பார்க்கப்படுகிறது.


தனது சர்ச்சைக்குறிய பேச்சைக் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.