வீழ்ந்தது நியூசிலாந்து... 20 வருட பகையை தீர்த்தது இந்தியா - சாதனை சதத்தை தவறிவிட்ட கோலி!
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்களை அடித்தார்.
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி தரம்சாலா ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கில் சாதனை
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு பதில் சூர்யகுமார் யாதவ், ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில், நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணி சார்பில் டேரில் மிட்செல் 130 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ஷமி 5, குல்தீப் 2, சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 274 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் - கில் ஜோடி வழக்கம்போல் அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. போல்ட், ஹென்றி ஓவர்களை ரோஹித் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட ரன்கள் மடமடவென வந்தது. பதிலுக்கு கில்லும் பவுண்டரிகளை அடித்தார். மேலும், அவர் ஒருநாள் அரங்கில் 2 ஆயிரம் ரன்களை இன்று கடந்தார். அவர் இந்த மைல்கல்லை 38 போட்டிகளில் எட்டியுள்ளார். இதற்கு முன் ஹசீம் ஆம்லா 40 போட்டிகளில் 2000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மேலும் படிக்க | மறக்க முடியாத ரன் அவுட்... குழந்தையை போல் அழுத தோனி - 2019 சோகக்கதை!
போராடிய விராட்
தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த ரோஹித் பெர்குசனின் முதல் பந்திலேயே (12 ஓவர்) ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 46 ரன்களை குவித்தார். பெர்குசனின் அடுத்த ஓவரில் (14 ஓவர்) கில்லும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, விராட் கோலியுடன், ஷ்ரேயாஸ் ஐயரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இந்த ஜோடி 52 ரன்கள் எடுத்தபோது, ஷ்ரேயாஸ் ஐயர் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். போல்ட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் சிக்கிய ஷ்ரேயாஸ் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கே.எல் ராகுலும் விராட் கோலி உடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடியும் 54 ரன்களை எடுத்த போது, கேஎல் ராகுல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தவறியது சதம்
இதன்பின் வந்த சூர்யகுமார் விராட் கோலியின் தவறால் அழைப்பால் ரன் அவுட்டாகி 2 ரன்களில் துரதிருஷ்டவசமாக வெளியேறினார். இதையடுத்து, கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா. அந்த ஜோடி விக்கெட்டை கொடுக்காமல் ரன்களை குவித்தனர். விராட் கோலி சதம் நோக்கி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டு வந்தார். ஆனால், போல்ட் வீசிய 48ஆவது ஓவரின் நான்காவது பந்தில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து 95 (104) ரன்களில் ஆட்டமிழந்தார்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் சச்சின் சாதனையை (49 ஓடிஐ சதம்) விராட் கோலி இன்று முறியடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பலருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அந்த ஓவரின் கடைசி பந்திலேயே ஜடேஜா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அதன்மூலம், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷமி தேர்வானார். இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | ரோஹித்திற்கு விரலில் காயம் - மோசமானதா தரம்சாலா மைதானம்... என்ன பிரச்னை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ