ரோஹித்திற்கு விரலில் காயம் - மோசமானதா தரம்சாலா மைதானம்... என்ன பிரச்னை?

IND vs NZ: நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின் போது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் வலது கை விரல் காயம் ஏற்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 22, 2023, 05:57 PM IST
  • கான்வே, வில் யங் விரைவாக ஆட்டமிழந்தனர்.
  • இந்திய அணி பீல்டிங் இன்று சற்று மோசமாக இருந்தது.
  • தரம்சாலா மைதானத்தின் அவுட்பீல்ட் மீது பல புகார்கள் உள்ளன.
ரோஹித்திற்கு விரலில் காயம் - மோசமானதா தரம்சாலா மைதானம்... என்ன பிரச்னை? title=

IND vs NZ: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் லீக் போட்டி தரம்சாலா நகரில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை இரு அணிகளுமே தோல்வியடையாமல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

நியூசிலாந்து நிதானம்

அந்த வகையில், இன்று இரண்டுல் ஒரு அணி தோல்வியடைய உள்ளது. மேலும், கடந்த 20 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் இந்திய அணி நியூசிலாந்தை (IND vs NZ) வீழ்த்தியதே இல்லை என்ற கவலையளிக்கும் சாதனையை வைத்திருப்பதும் நினைவுக்கூரத்தக்கது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. 

நியூசிலாந்து அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது என்றாலும், இன்று இந்திய அணியின் பீல்டிங் சற்று பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். தொடக்க ஓவர்களில் கான்வே 0, வில் யங் 17 என ஆட்டமிழந்தாலும் ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஆகியோரின் 150+ பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தியது எனலாம்.

மேலும் படிக்க | அட பாவமே! பாண்டியாவால் அணியில் நீக்கப்பட்ட ஷர்துல்! நியூஸி-க்கு எதிரா இந்தியாவின் பிளேயிங் லெவன்

ஒரே மூச்சில் 10 ஓவர்கள்

குறிப்பாக, இதில் ஜடேஜா, கேஎல் ராகுல், பும்ரா என முன்னணி வீரர்கள் இன்று தலா 1 கேட்சை தவறவிட்டனர். மேலும், ஜடேஜா ரவீந்திராவின் தொடக்க கட்ட பேட்டிங்கின்போது கொடுத்த கேட்சை தவறவிட்டது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பீல்டிங் சொதப்பல் பந்துவீச்சாளர்களுக்கும் சோர்வை ஏற்படுத்தியது பார்க்க முடிந்தது. 

மேலும் இன்று ஹர்திக் பாண்டியா எனும் 6ஆவது பந்துவீச்சாளர் இல்லை என்பதால் 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து ஓவர்களையும் வீசினர். இதில் 11ஆவது ஓவரில் பந்துவீச வந்த ஜடேஜா தொடர்ந்து தனது 10 ஓவரையும் வீசிவிட்டுச் சென்றார். அவர் இன்று விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 48 ரன்களை கொடுத்திருந்தார். 

ரோஹித்திற்கு விரலில் காயம் 

இது ஒருபுறம் இருக்க, ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. அவர் பந்தை பிடித்தபோது, சற்று தடுக்கி விழுந்ததில் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் பெவிலியன் திரும்பினார். பாண்டியாவும் இன்றைய போட்டியில் இல்லை என்பதால் கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் பார்த்துக்கொண்டார். தொடர்ந்து, சில ஓவர்களிலேயே ரோஹித் மைதானத்திற்கு திரும்பிவிட்டார். பேட்டிங்கில் அவருக்கு இதனால் பிரச்னை வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தரம்சாலாவின் அவுட் பீல்ட் (Dharamshala Stadium Outfield) குறித்து இந்த உலகக் கோப்பை தொடங்கியதில் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் இந்த மோசமான அவுட்பீல்ட் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மைதானத்தில் பீல்டிங் செய்யும்போது, பல வீரர்கள் தடுக்கி விழுவதை நம்மால் பார்க்க முடிந்தது.

பெர்முடா புற்கள்..

இதுகுறித்து முன்னதாக ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் மோஹித் சூட் கூறுகையில்,"நாங்கள் சமீபத்தில் முழு மைதானத்தின் அவுட்பீல்டையும் மீண்டும் புனரமைத்தோம். நாங்கள் பெர்முடா புல்லைப் பயன்படுத்தி உள்ளோம். இது குளிர்கால புல் ஆகும். இது இந்தியாவில் முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. 

கடந்த ஆறு மாதங்களாக வானிலை மிக மோசமானதாகவும், கடினமானதாகவும் இருந்தது. நிறைய மழை பெய்தது, குளிரும் அதிகம் இருந்தது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், மேலும் வீரர்கள் பீல்டிங் செய்யும் போது எந்த பிரச்சனையும் சந்திக்காமல் இருக்க, சிக்கலை சரிசெய்ய நாங்கள் ஒரே இரவில் வேலை செய்கிறோம். ஆம், கடந்த ஆட்டத்தை விட நிலைமை மேம்பட்டுள்ளதை நிச்சயமாக நீங்களே பார்க்கலாம்" என்றார். 

இதனை அவர் இந்த மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின் கூறினார். அந்த போட்டிதான் அங்கு நடைபெற்ற முதல் போட்டியாகும். அதாவது அங்கு பனியும், மழையும் அதிகம் இருப்பதால் புல் சரியாக வளராது. எனவே, இங்கு தட்பவெப்பம் 10 டிகிரிக்கும் கீழ் சென்றாலும் சரியாக வளரும் வகையில் தான் இந்த பெர்முடா புற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இப்படி ஆடுனா அரையிறுதி எங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் - ஜோஸ் பட்லர் விரக்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News