விம்பிள்டன் 2017: 19வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் குரோஷியாவின் மரின் சிலிச்சை நேர் செட்களில் வீழ்த்திய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 19-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
காயம் காரணமாக தடுமாறிய சிலிச், 2வது செட்டில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடினார்.
பெடரர் 2வது செட்டை 6-1 என கைப்பற்றி முன்னிலையை அதிகரித்தார். மூன்றாவது செட்டில் சிலிச் கடுமையாகப் போராடிய நிலையில், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
விம்பிள்டனில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனைகள் அவரது வசமாகின. இது அவர் வெல்லும் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.