மகளிர் ஐபிஎல்: சாம்பியனானது மும்பை இந்தியன்ஸ்... கடைசி ஓவர் வரை பரபரப்பு!
WPL 2023 Final: முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
WPL 2023 Final: ஐபிஎல் தொடரை போன்று மகளிருக்கான டி20 தொடரான, WPL தொடர் இந்தாண்டு முதல் தொடங்கப்பட்டது. மகளிர் ஐபிஎல் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், உத்தர பிரதேசம் என ஐந்து அணி விளையாடின.
டெல்லி vs மும்பை
கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில், மொத்த் 20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு, டெல்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதாவது, லீக் சுற்றில் முதலிடம் பிடித்த அணி நேரடியாக தகுதிபெற்றது. 2ஆம், 3ஆம் இடத்தை பிடித்த அணிகள் பிளே-ஆப்பில் மோதின.
இதையடுத்து, உத்தர பிரதேசம் அணியை பிளே-ஆப்பில் தோற்கடித்து, மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அந்த வகையில், மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்றிரவு (மார்ச் 26) நடைபெற்றது.
மேலும் படிக்க | சரவெடியாக வெடித்த தென்னாப்பிரிக்கா... டி20யில் கெத்தான சாதனை - வரலாற்று வெற்றி!
டெல்லி சொதப்பல்
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஓப்பனரும், கேப்டனுமான மெக் லான்னிங் மட்டும் 35 ரன்களையும், இறுதிநேரத்தில் ஷிகா பாண்டே 27 ரன்களையும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இஸி வாங், ஹேலே மாத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் இருந்து நிதானமாக விளையாடி இலக்கை நோக்கி படிபடியாக நகர்ந்தது. ஓப்பனர்களான ஹேலே மாத்யூஸ், யஸ்திகா பாட்டீயா ஆகியோர் சொற் ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், நாட் ஸ்கிவர்-பிரண்ட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இவர்கள் 72 ரன்களை குவித்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் 37 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஸ்கிவர் கடைசிவரை களத்தில் நின்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை வாங்கித்தந்தார்.
முதல் சாம்பியன்
இதன்மூலம், 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியைடந்த பின், இந்த வெற்றி தற்போது அவருக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கும் என கூறி, ரசிகர்கள் அவருக்கு தங்களின் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ