தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை, நிரந்தரமாக மூட வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராம பகுதியில், வே தாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை வெளியிடும் நச்சு புகை காரணமாக அந்த கிராம மக்கள், மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில், தற்போது சிப்காட் விரிவாக்கப் பகுதியில் 2-வது ஆலையை நிறுவ உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.


இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12 சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள், அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 


இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை, நிரந்தரமாக மூட வலியுறுத்தி, குமரெட்டியார்புரம் கிராம மக்கள் கடந்த 40 நாட்களாக தங்களது கிராமத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.