மோதலை தவிர்த்து தொடர்ந்து நல்லிணக்கம் பேணுக -சிபிஎம் வேண்டுகோள்!
மோதலை தவிர்த்து நல்லிணக்கம் பேண வேண்டும் என்று பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது .
மோதலை தவிர்த்து நல்லிணக்கம் பேண வேண்டும் என்று பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது .
இதுகுறித்து கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் பெரியகுளம் தாலுகா செயலாளர் எம் .வீ.முருகன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியதாவது:-
கடந்த 05.05.2018 ஆம் தேதியன்று பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டியில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இதுவரை இணக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இச்செய்தியை அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் ஸ்தலத்திற்கு இருதரப்பு மக்களையும் சந்திக்கச் சென்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சந்திப்பை தவிர்த்து, விபரங்கள் கேட்டு வந்தோம். இறந்தவரை மயானத்திற்கு எடுத்துச் செல்வதில் இருதரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இப்பிரச்சனை ஏற்பட்டவுடன் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை தலையிட்டு அமைதிக் குழு அமைத்து அமைதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்ட அனுபவங்கள் நாட்டில் பல உண்டு. இன்றைய சமூகச் சூழலில் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதே பெரும் பிரச்சனையாக உள்ளது என்பதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் இருக்கிறது. இந்நிலையில் பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களைக் கூட மோதல் போக்கிற்கு இட்டுச் செல்லும் முயற்சியை நாம் அறிந்தோ, அறியாமலோ ஆட்பட்டுவிடும் நிலைமையும் ஏற்படுவதுண்டு.
பிரச்சனையை பேசித் தீர்ப்பதற்கு இருதரப்பிலும் உள்ள முக்கியமான பெரியவர்கள், அரசுத்தரப்பு அதிகாரிகள், மக்கள் ஒற்றுமையை விரும்பும் நல்லோர்களின் அமர்வுகள் மூலம் தீர்வு காணமுடியும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
கடவுள் வழிபாட்டுக்களைக் கூட (விநாயகர் சதுர்த்தி) மோதலுக்கு இட்டுச் செல்லும் விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து விடுகிறது. உழைப்பதின் மூலமே வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ள உழைப்பாளி மக்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகளும் கடமைகளும் நமக்கு முன் உள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. தொழில், வியாபாரம் என்ற வாழ்வாதாரத்துக்காக நடத்தும் பணிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. அரசு பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோதலுக்கு இடம் தரோம், பிரச்சனைகளை பேசி தீர்ப்போம், மக்கள் ஒற்றுமையை பேணி பாதுகாப்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.