காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வெளிமாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை நியமித்ததற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மாணவிகளை பாலியல் செயலுக்கு தூண்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக்குழுவை தமிழக ஆளுநர் அமைத்தார். இதற்க்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


இதனையடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நேற்று சென்னை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். 


அப்போது அவர் கூறியதாவது:- நிர்மலா டீச்சர் எனக்கு யாருனே தெரியாது. நிர்மலா தேவியின் முகத்தைக்கூட இதுவரைப் பார்த்தது இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அபத்தமானவை என்று விளக்கமளித்தார். 


எந்த பாரபட்சமும் பார்க்காமல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர் சந்தானம் நடத்தும் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு, யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கூறினார். 


ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் நிலையில், பெண் செய்தியாளர் ஆளுநரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் பெண் செய்தியாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக் கொடுத்தார்.


ஆளுநரின் இந்த செயலுக்கு பெண் செய்தியாளர் உட்பட, தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆளுநரை திரும்பப் பெறக்கோரி நேற்றும், இன்றும் போராட்டங்களும் நடைபெற்றன. 


இதனையடுத்து, பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டியதற்கு நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார்.


இதையடுத்து,  ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ள, ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான உயர்மட்ட விசாரணை குழு இன்று பேராசிரியையிடம் விசாரணை நடத்த உள்ளது.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. ஆளுநர் தன்னைச் சார்ந்த சர்ச்சைகள் குறித்து இப்பயணத்தின்போது விளக்கம் அளிப்பார் எனக் கூறப்பட்டது.


இந்நிலையில் அவர் தற்போது தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.