முகத்தில் உள்ள கரியைத் துடையுங்கள் துணை முதல்வரே- துரைமுருகன் தாக்கு
உங்கள் முகத்தில் உள்ள கரியைத் துடையுங்கள் துணை முதல்வரே, அடுத்தவர் முதுகில் மச்சம் இருப்பதை அப்புறம் எட்டிப் பார்க்கலாம் என துரை முருகன் கூறியுள்ளார்.
சர்க்காரியா கமிஷனுக்குப் பயந்து காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்திற்கு திமுக துரோகம் செய்துவிட்டது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபிறகும், சொந்தக் கட்சியின் தேர்தல் லாபத்திற்காகத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் தரவோ கண்டிக்கவோ இயலாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தி.மு.க. மீது அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.கழகமும் அதன் தோழமைக் கட்சியினரும் இணைந்து பொதுமக்களின் பேராதரவுடன், குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வரவேற்புடன் வெற்றிகரமாக நடத்திய காவிரி உரிமை மீட்பு பயணத்தின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் பொதுக்கூட்டம் போடுகிறார்கள். பேசுவதற்கு அவர்கள் வந்தாலும், கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில், தி.மு.க. மீது வசை பாடிவிட்டுப் போகிறார்கள்.
அக்கம்பக்கத்து வீடுகளில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு, அகப்பட்டுவிடக்கூடாது என்று ஓடுகிற நபர், “திருடன்.. திருடன்..” எனக் கத்திக்கொண்டே ஊரார் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப நினைத்ததுபோல, நாகப்பட்டணத்தில் பேசிய, பதவி வாங்குவதற்காகவே தர்மயுத்தம் நடத்திய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், “சர்க்காரியா கமிஷனுக்குப் பயந்து காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தி.மு.க. துரோகம் செய்துவிட்டது” என்ற அரதப் பழசான பாட்டையே பாடியிருக்கிறார். அவருடைய அவதூறு கச்சேரி களைகட்டவில்லை. எப்படி களைகட்டும்? இதே அவதூறை அவருக்கு முதன்முதல் மந்திரி பதவி கொடுத்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் சொல்லிவிட்டு, அதன்பிறகு தனக்கு டங் ஸ்லிப் ஆகிவிட்டது என்றும், தானும் மனுஷிதானே என்றும் வருத்தம் தெரிவித்த வரலாறு உண்டு.
ஓ.பி.எஸ்.ஸூக்கு வரலாறும் தெரியாது. உண்மை நிலவரமும் புரியாது. தேய்ந்து போய் கீறல் விழுந்த ரிகார்டு போல, பொய்யையும் புரட்டையும் பேசி, தி.மு.கழகத்தின் மீது பழிபோடுவதாக நினைத்து, மல்லாந்து படுத்து எச்சில் துப்பியிருக்கிறார். காவேரிப் பிரச்சினை தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரு தலையாய பிரச்சினை. கர்நாடகம், கேரளா மாநிலங்களுக்கும் இதே நிலைதான். 1924ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே இந்த பிரச்சினை தொடங்கிவிட்டது எனலாம்!
1967ஆம் ஆண்டுக்கு முன்னால், கர்நாடகம் காவேரியை ஏகபோக சொத்தாக கருதி, காவேரியிலும் - அதன் துணை நதிகளிலும், அவர்கள் நினைத்த வண்ணம் தண்ணீரை மடக்கி, அனுபவித்து வந்தார்கள். 1967-இல் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக வந்தபோது, அவரது அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக அமர்ந்தவர்தான் தலைவர் கலைஞர். 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை கரத்தில் ஏந்திக் கொண்டு கர்நாடகத்தை நோக்கி, காவேரிக்காக முதல் உரிமைக்குரல் எழுப்பிய ‘முதல்’அமைச்சர் தலைவர் கலைஞர்தான்! கர்நாடக முதலமைச்சராக இருந்த வீரேந்திரா பாட்டீலோடு பேச்சு வார்த்தை நடத்தியதுடன், 1924ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகவில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவரும் கலைஞர்தான். 35 முறை கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாத நிலையில், காவிரி விவகாரத்தை தீர்த்துவைத்திட நடுவர் மன்றம் தேவை என்பதற்காக சட்டமன்றத்தில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்தியப் பிரதமராக சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் இருந்தபோது, நடுவர் மன்றத்தை அமைத்துக் காட்டியவரும் கலைஞர்தான். அந்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு அனைத்தும் கிடைப்பதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் கலைஞரின் அரசுதான். இடைப்பட்ட காலத்தில், கர்நாடக அரசுடன் பேசி, மேட்டூர் அணையை குறிப்பிட்ட நேரத்தில் திறக்கும் வகையில் தண்ணீர் கிடைக்கச் செய்து டெல்டா மாவட்டங்களை செழிக்க வைத்ததும் தி.மு.கழக அரசுதான்.
இந்த மாபெரும் காரியங்களை, கலைஞர் நடத்திக் கொண்டிருந்த போது, அரசியல் அரிச்சுவடிகூட தெரியாதவர்கள் எல்லாம், தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து ஏகடியம் பேசுகிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களுடன் 50 ஆண்டுகாலமாக அருகிலிருப்பதுடன், அவரது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவன் என்பதால் காவிரி உரிமைக்காக கலைஞரும் தி.மு.க. அரசும் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் அறிந்தவன் நான். கலைஞரின் செயல்பாடுகளை பட்டியல் போட்டு சொல்ல முடியும். ஆள் இல்லாத கடைக்கு முதலாளியான ஓ.பி.எஸ் அவர்களே.. உங்களால் ஆதாரத்துடன் பேச முடியுமா?
சர்க்காரியாக கமிஷனுக்கு பயந்து 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்று உங்கள் தலைவி ஜெயலலிதா போலவே தவறாகப் பேசுகிறீர்களே? சர்க்காரியா கமிஷன் என்பது 1976ல் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டபிறகு போடப்பட்ட பழிவாங்கும் கமிஷன். அதில் புகார் கொடுத்த உங்கள் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களே, தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கமிஷன் விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டுப் போய்விட்டார். 1976ல் போடப்பட்ட சர்க்காரியா கமிஷனுக்காக 1974ல் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை என்பதிலிருந்தே வரலாற்றுப் பாடத்தில் நீங்களும் உங்கள் கட்சியைச் சார்ந்தவர்களும் எவ்வளவு வீக் என்பது தெரிகிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிலும் 1924ல் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதிலிருந்தே, 1974ல் கலைஞர் அரசு எடுத்த உறுதியான நிலைப்பாடு தமிழகத்தின் நலன் சார்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பொய் நெல் குத்தி பிழைப்பு நடத்த முடியாது. காவிரி உரிமையை காக்க கலைஞர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது செய்ய வேண்டியது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியதுதான். அதை மத்திய அரசு அமைப்பதற்கு, மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ள நீங்கள்தான் வலியுறுத்த வேண்டும். ஆனால், அ.தி.மு.க. ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது.
சட்டமன்றத்தில் இது பற்றி நாங்கள் பேசினால், கெடு தேதி முடியும்வரை பொறுமை காப்போம் என அறிவுரை-அருளுரை வழங்குகிறீர்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் உங்கள் எம்.பிக்கள் பொறுமை காக்காமல், அமளிதுமளி செய்து, அவையை முடக்கி, அதன் மூலம் பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ளாதபடி செய்கிறீர்கள். உங்கள் முகத்தில் உள்ள கரியைத் துடையுங்கள். அடுத்தவர் முதுகில் மச்சம் இருக்கிறதா என எட்டிப் பார்க்காதீர்கள். இந்த நொடி வரை காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து வருவது அ.தி.மு.க.தான். அந்தப் பழியை மறைக்க எங்கள் மீது அவதூறுச் சேற்றை வீச நினைத்தால், வரலாற்று வரிகளால் திருப்பி அடிக்க நேரிடும்
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.