10% இட ஒதுக்கீடு விவகாரம்: நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து கலந்து ஆலோசிக்க நாளை மறுநாள் (ஜூலை 8) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
சென்னை: 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து கலந்து ஆலோசிக்க நாளை மறுநாள் (ஜூலை 8) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
முன்னேறிய வகுப்பினருக்காக அவசர அவசரமாக மத்திய அரசு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கின்றது. சமூக நீதியின் தாயகத்தில் வாழக்கூடிய நம்முடைய நாக்கில் தேனைத்தடவி ஏமாற்ற நினைக்கின்றது மத்திய அரசு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே, பொதுப்பிரிவினருக்கான 31 சதவிகித இட ஒதுக்கீடில் நடைமுறையில் சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதில் முன்னேறிய சாதியினர் உள்ளிட்ட திறமையுள்ள அனைத்து பிரிவினரும் போட்டியிட்டு தேர்ச்சி பெறுகின்றார்கள்.
ஆகவே, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, இந்த அரசின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய கொள்கை என்ன? என்பதை விளக்கம் அளிக்க வேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டில், இந்த அரசு அசையாமல் உறுதியாக நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கடந்த 9 ஆம் தேதி பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள்.
இந்தநிலையில், முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து கலந்து ஆலோசிக்க நாளை மறுநாள் (ஜூலை 8) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.