இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10வது  ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நீடித்து வந்த உள்நாட்டுப் போர், 10 ஆண்டுகளுக்கு முன்பாக, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளுடன் நிறைவடைந்தது.


இலங்கை இறுதிப் போரின் போது, அனைத்து தரப்பினராலும், கைவிடப்பட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி. இங்கு தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், ஈவு இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம். 


இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் பலர் காணாமல் போயினர். பல நூறு பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். 


இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழ் மக்கள், தங்கள் ரத்தத்தை ஆகுதியாக்கி, ஆறாக ஓட விட்ட மண்தான் முள்ளிவாய்க்கால். இதன் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.