போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதி நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை, ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனத்தில் டிரக்கிங் கிளப் மூலம் மொத்தம் 36 பேர் தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் காட்டு தீ பரவியதால் அவர்கள் வெளியேற முடியாமல் திணறினர். 


இதை சாட்டிலைட் மூலம் கொடைக்கானல் வனத்துறையினர் கண்டுபிடித்து தேனி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறை, தீயணைப்பு துறையினர் உஷார் படுத்தப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 


இதற்கிடையில் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிர்மலா சீத்தாராமன் விமானப்படைக்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் பேரில் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


இதுவரையில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்தும் தனியார் உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறியது:-


தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன். 10-15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர  முயற்சி எடுத்துவருகின்றனர். அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்தும் தனியார் உதவி அளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்களையும் அனுப்பியிருந்தாக தெரிவித்தார். @IAF_MCC சூலூரிலிருந்து helicopter களை அனுப்புகிறது.  


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.