தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதுதொடர்பான அறிவிப்பினை தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்., கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன, மற்றும் 3018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.



தமிழகத்தில் 14 இடங்களில் கொரோனா ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது, புதிதாக 3 இடங்களில் ஆய்வகம் அமைக்கப்படுவுள்ளது. 121 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.


28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 3470 பேர் தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணிகளை தமிழக அரசின் 11 குழுக்கள் தீவிரப்படுத்தியுள்ளன.


மக்களின் பாதுகாப்பு நலன் கருதி 25 லட்சம் N95 முக கவசங்களை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கண்டுபிடிக்கும் டெஸ்ட் கிட் 30 ஆயிரம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.


வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கண்டறிந்து உதவி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைகளை அறிந்து உதவி செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த இக்கட்டாண சூழலில் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்த முடியாது,  கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். தற்போதைய நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி தனிமைப்படுத்தல் மட்டுமே. மக்கள் நிலையை அறிந்து வீட்டில் இருக்க வேண்டும்.


கொரோனா உயிர் தொடர்புடைய விஷயம், இதன் வீரியம் பாமர மக்களுக்கு தெரியவில்லை. மக்களின் நன்மைக்கு தான் கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தொற்று நோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தற்கு வரும் காய்கறி வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது.


தற்போது தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வழக்குகளில், ஈரோட்டில் இருந்து அதிகமாக புதிதாக 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரோட்டில் இதுவரை 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் புதிதாக 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது, திருவாரூரில் ஒருவருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு சுமார் 1500 பேர் குழுவாக சென்று திரும்பியுள்ளனர், இந்த குழுவில் இடம்பெற்று இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய 1500 பேர் குழுவில் இடம்பெற்றவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.