நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ் குரல்!! தமிழக எம்பிக்கள் பதவியேற்பு!!
இன்று தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.கள் `தமிழ் வாழ்க` என்ற கோசத்துடன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதுடெல்லி: 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் 2வது நாளான இன்று தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.கள் "தமிழ் வாழ்க" என்ற கோசத்துடன் தமிழில் உறுதிமொழி ஏற்றனர்.
நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
முதல் நாள் கூட்டத்தில் வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வயநாடு மக்களவை தொகுதி எம்.பி-யாக பதவியேற்றுக் கொண்டார். நேற்று மட்டும் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 313 எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் தமிழகம் உட்பட மீதமுள்ள மாநிலங்களை சேர்ந்த எம்.பி-க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்தவகையில் தமிழ் நாட்டில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.கள் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். சிலர் "தமிழ் வாழ்க", சிலர் "தமிழ் வாழ்க" "பெரியார் வாழ்க" சிலர் "காமராஜர் வாழ்க" மற்றும் அதிமுக எம்பி "வாழ்க எம்ஜிஆர்" வாழ்க ஜெயலலிதா" எனக்கூறி பதவியேற்றுக் கொண்டனர்.