18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சபாநாயகர் தனபால் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும்,  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர். அதன்பின்னர் 2017 செப்டம்பர் மாதம் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் விசாரனைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் மூன்றாவது நீதிபதியாக சத்ய நாராயணன் நியமிக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. விசாரணை நடத்தி வந்த நீதிபதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.அதில், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என நீதிபதி சத்ய நாராயணன் தீர்ப்பளித்தார். 


இந்நிலையில் தற்போது 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சபாநாயகர் தனபால் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 


இந்த தீர்ப்பை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட் 18 எம்.எல்.ஏக்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தால், இந்த வழக்கு குறித்து தன்னிடம் எந்த கருத்தும் கேட்காமல், எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதற்காக இந்த கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.