வாகனங்களில் ’சூட்கேஸ்’களுடன் பயணிப்பவரா நீங்கள்? - ஸ்கெட்ச் போடும் இவர்களிடம் உஷார்!
உளுந்தூர்பேட்டை அருகே வேனில் இருந்த 264 பவுன் நகையை சினிமா பாணியில் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தங்கபெருமாள் மகன்கள் பெரியசாமி(35), ஆனந்தராசு(34). மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர் தங்கள் குடும்பத்தினருடன் வேனில் சொந்த ஊரான விளாத்திக்குளம், புதூர் நாகலாபுரத்துக்கு சென்றனர். வேனை செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையை சேர்ந்த பாண்டியன்(35) ஓட்டிச் சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் காந்தி நகர் பகுதியில் சாலை ஓரத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது வேனின் ஒரு பெட்டியில் இருந்த 264 பவுன் நகை மாயமாகியிருந்தது. இதனால் அதில் வந்த பெண்கள் கதறி அழுதனர். இது குறித்து திருநாவலூர் போலீசில் அவர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் நகை கொள்ளை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
திருநாவலூர் போலீசார் புகார் கொடுக்க சென்ற நபர்களிடம் வழியில் வேறு எங்காவது நிறுத்தினீர்களா என கேட்டுள்ளனர். விக்கிரவாண்டி அருகில் நிறுத்தியதாக கூறியதை அடுத்து அங்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது வேனின் மேல் பகுதியில் பெட்டி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து வரும் வழியில் விக்கிரவாண்டி சாலையோரம் டீக்கடையில் வேனை நிறுத்தி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்ற போது பின்னால் ஒரு மினி டெம்போவில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வேனை பின்தொடர்ந்து வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் வேகத்தடையில் மெதுவாக செல்லும் போது ஒருவர் வேன் மேலே ஏறி அங்கிருந்த இரண்டு சூட்கேஸ் பெட்டிகளை தூக்கிக் கீழே போட்டுள்ளார்.
அந்தப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளனர். போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவுகளை வைத்து பார்க்கும்போது வேனில் பின்னால் மினி டெம்போவும், முன்னால் ஒரு காரும் சென்றது தெரியவந்தது. அந்த வண்டி எண்களைக் கொண்டு விசாரணை செய்ததில் அது மதுரையைச் சேர்ந்தது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மதுரை போலீசாருடன் தொடர்புகொண்டு விசாரிக்கையில் தேசிய நெடுஞ்சாலை வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | சேலத்தில் 720 பவுன் நகை கொள்ளை
இதையடுத்து 2 தனிப்படை போலீசார் மதுரைக்குச் சென்று செல்போன் சிக்னலை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கொள்ளை கூட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் மட்டும் போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேசிய நெடுஞ்சாலைகளில் எடுத்து செல்லப்படும் பெட்டிகள் மற்றும் பொருட்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் கிடைக்கும் பணம் மற்றும் நகைகளை கொள்ளை கும்பல் அவர்களுக்குள் பங்குபோட்டுக்கொள்வதும் தொடர் கதையாக இருந்துள்ளது.
கொள்ளை கூட்டத்தில் தலைவன் தலைமறைவான நிலையில் இவர்களுக்கு உதவிய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் அரங்கேறிய இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை CCTV காட்சி வெளியானது -VIDEO
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR