2,711 மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்: அமைச்சர் ஜெயக்குமார்!
ஒகி புயலின்போது கடலுக்கு சென்ற மீனவர்களில் 2,711 மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒகி புயலின் போது கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தாலும் மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பத்திலும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்; மீட்கப்பட்ட 2015 மீனவர்கள், 245 விசைப்படகுகள் பட்டியல் நேற்று கன்னியாகுமரியில் வெளியிடப்பட்டது. அத்துடன் கன்னியாகுமரி மாவட்ட பத்திரிகைகளில், மேலும் 696 மீனவர்களின் பெயர்கள் மற்றும் 70 படகுகளின் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலின் படி 2,711 மீனவர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 315 விசைப்படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன. இததை தவிர 13-வல்லங்கள் மற்றும் 56 இயந்திரப் படகுகள் மட்டும் திரும்பி வரவேண்டியுள்ளன என்று தெரிவித்தார்.