கோவை  ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் என்பவருக்குச் சொந்தமான பத்மராஜா தங்க நகைப் பட்டறை உள்ளது. இங்கு 16 பேர் வேலை பார்க்கின்றனர்.இங்கு நகை தயாரிக்கும் போது தங்கத்தை சுத்தப்படுத்துவற்காக கெமிக்கல் பயன்படுத்துவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கெமிக்கலுடன் தங்க துகள்கள் சேர்ந்து வெளியேறும். அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘சின்டெக்ஸ்’ தொட்டிக்கு செல்லும். 6 மாதத்துக்கு ஒரு முறை இந்த தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரில் இருந்து தங்க துகள்களை பிரித்து சேகரிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நகைப் பட்டறையில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்த நகைப்பட்டறையில் நகைகளை சுத்தம் செய்யும்போது வெளியேறும் வேதிக் கழிவு நீரை சேமிக்க 5 முதல் 6 அடி ஆழமுள்ள தொட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் நகைப் பட்டறை தொழிலாளர்களான கவுரிசங்கர், ஏழுமலை, சூரியா ஆகியோர் இந்த தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியதாக கூறப்படுகிறது.


தொட்டியின் மூடியைத் திறந்து உள்ளே இறங்கியபோது அதில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் 3 பேரும் மயக்கமடைந்தனர். இதையடுத்து சக தொழிலாளர்கள் உடனடியாக அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏழுமலை, சூரியா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


மூச்சுத் திணறலுடன் மயக்கத்துடன் இருந்த கவுரி சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக நகைப் பட்டறை உரிமையாளர் ரவிசங்கரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 3 பேரையும் தொட்டியில் இறங்க அனுமதித்தது ஏன் என்பவை உள்ளிட்ட குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.