திருச்சி-யில் தேமுதிக, காங்கிரஸ், உள்பட 31 பேரின் வேட்பு மனு ஏற்பு!
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தேமுதிக., காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தேமுதிக., காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த 19-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் கடைசி நாளான நேற்று அனைத்து தொகுதிகளிலும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
அந்தவகையில் வரும் மக்களவை தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று திருச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர் அமித்குமார் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சிவராசு முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் தேமுதிக, காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த முருகானந்தம், மாயக்கண்ணன், ரமணி, சந்தோஷ்குமார், இளங்கோவன், ராஜேந்திர குமார் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளின்படி உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்காததால் குறிப்பிட்ட 6 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பாளர்களின் மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலனை செய்த பின்னர் அவர்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.