வானதி ஸ்ரீனிவாசனுக்கு கோவை எம்.பியின் 5 கேள்விகள்.!
கோவை மாவட்டத்துக்காக என்ன செய்திருக்கிறீர்கள் என்று வானதி ஸ்ரீனிவாசனுக்கு, கோவை எம்.பி பி.ஆர்.நடராசன் ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ளார்.
கோயம்புத்தூர்!. கொரோனா தொற்றில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம். இதுமட்டுமல்ல, தமிழக அரசியலிலும் சமீப காலமாக அதிகம் பரபரப்பாக பேசப்படும் மாவட்டம். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட பிம்பத்தை நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடைத்துள்ளது. குறிப்பாக கோவையில் பெருவாரியான வாக்குகளை திமுக பெற்றது. இதுமட்டுமல்லாது, தமிழகத்தில் பெரிய கட்சியாக உருவெடுக்க முயலும் பாஜக கன்னியாகுமரியில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், கோவை மாவட்டம்தான் அவர்களின் முக்கியமான அரசியல் மேடையாக பார்க்கப்படுகிறது.
பாஜகவின் பெரும்பாலான நடவடிக்கைகளில் கோவையில் இருந்து தொடங்கும் அளவுக்கு ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சில முக்கிய பிரமுகர்கள் கோவையில் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். இதுமட்டுமல்லாமல், மத்தியில் இருக்கும் பாஜக தேசியத் தலைவர்கள் தமிழகத்துக்கு வருகை தந்தால், பொதுக்கூட்டத்துக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாவட்டமும் கோவை மாவட்டமாகத்தான் இருப்பதும் சமீப காலச் செய்திகளின் உதாரணங்கள்.
மேலும் படிக்க | பெரியார் சிலைக்கு செருப்பு மாலை! கோவையில் பரபரப்பு
இந்நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் பாஜகவை வளர்த்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தெற்கு ரயில்வேயின் கீழ் கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்திலிருந்து கோவையை முழுமையாக பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன், 16 ஆண்டுகளுக்கு முன்பே பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவை பிரிக்கபட்டு சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது வானதிஸ்ரீனிவாசன் இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பது அவரது அறியாமையை காட்டுவதாக விமர்சித்திருந்தார். இதனால் கோவை மாவட்டத்தில் வானதிஸ்ரீனிவாசனுக்கும், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசனுக்கும் அரசியல் கருத்துப் போர் நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதன் அடுத்தகட்டமாக தற்போது வானதிஸ்ரீனிவாசனுக்கு ஐந்து கேள்விகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் முன்வைத்துள்ளார்.
அவை இதுதான்;
1. ஏழு ஆண்டுகால பாஜக ஆட்சியில் கோவையில் ஒரு புதிய ரயிலைக்கூட விடாத அரசு, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து கேள்வி எழுப்புவது அரசியல் சாமர்த்தியம்தானே!
2. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி இயங்கிக் கொண்டிருந்த அத்தனை ரயில்களையும் நிறுத்திவிட்டது ஒன்றிய பாஜக அரசு
3. பாஜக எப்போது ஆட்சியில் ஏறியதோ அப்போதே ரயில்வே பட்ஜெட் என ஒன்று இருந்ததைக் காலி செய்துவிட்டீர்கள்
4. பாஜக ஆட்சி அரசு சொத்துக்களையெல்லாம் விற்று சூறையாடி வருகிறதே தவிர, உருவாக்குவதில்லை ; உருவாக்கப்போவதில்லை.!
5. கோவைக்கு பிரதமர் மோடி இதுவரை செய்த ஒரு நல்ல விஷயத்தை வானதிஸ்ரீனிவாசனால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா ?
மேலும் படிக்க | கோவை தேவாலயத்தில் சிலை சேதம்! போலீசார் விசாரணை தீவிரம்
இந்த கேள்விகளுக்கு வானதிஸ்ரீனிவாசன் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR