டெல்லி தப்லிகி ஜமாத்தில் பங்கேற்ற 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 57 அதிகரித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 616 பேரை கண்டறிவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. எனவே மீதம் உள்ள 616 பேரும் தாங்களாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் எச்சரித்துள்ளார்.



நேற்று வரை தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி படுத்தப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.


இன்று புதிதாக கண்டறியப்பட 50 வழக்குகளில் 45 பேர் டெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த 45 பேரில் 22 பேர் நெல்லையை சேர்ந்தவர்கள் எனவும், நாமக்கல்லை சேர்ந்தவர்கள் 18 பேர், கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் 4 பேர் மற்றும் தூத்துக்குடியே சேர்ந்தவர் ஒருவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறியது தொடர்பாக 33,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23,691 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 28,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். விதிகளை மீறியவர்களிடம் அபராதம் என்ற வகையில், ரூ.13,99, 800 ரூபாய் வசூளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.