சிவகங்க்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெறும் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப் படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதில் பழங்கால நகர நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. வட்டப்பானை, தண்ணீர் தொட்டி, இரட்டைச்சுவர், பானை மூடிகள், வில் அம்பு பொறித்த பானை ஓடுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மதுரை அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு ஆராய்ச்சி மூலம் 2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் வரலாறு குறித்த பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன. மேலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், இன்னும் தமிழர்களின் நாகரிகம் குறித்து பல உண்மைகள் வெளிவரும் என கூறப்படுகிறது.


2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய கீழடி ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. 


தற்போது இங்கு 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைப்பெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய இந்த பணி வருகிற 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆய்வு பணிகள் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


6-ஆம் கட்ட அகழாய்வு பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் பனையூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.