7-நாள் சம்பளம் பிடித்த போக்குவரத்துக்கழகம்-தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு!!
தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் கடந்த மாதம் 4–ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் 7-நாள் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் கடந்த மாதம் 4–ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் 7-நாள் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு 22 தொழிற்சங்கங்களை சேர்ந்த சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மாதம் 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
இந்தநிலையில், வேலை நிறுத்த போராட்டத்தின்போது, பணிக்கு வராத தொழிலாளர்களின் ஊதியத்தை போக்குவரத்துக்கழகம் அதிரடியாக பிடித்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 5ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 7 நாட்களுக்கு வேலை நிறுத்த காலத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து சம்பளம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையே போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று (வியாழக்கிழமை) போக்குவரத்துக்கழக அதிகாரிகளை சந்தித்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்கவேண்டும் என்று முறையிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில்;- ‘‘தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களின் 7 நாட்கள் சம்பளத்தை போக்குவரத்துக்கழகம் பிடித்தம் செய்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் எடுத்துக்கூறி பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை திரும்ப பெற முயற்சிப்போம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். மத்தியஸ்தரின் முடிவை பொறுத்து எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்’’ என்றார்.