ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தைக் கடந்தும் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் மாளிகை தேவையற்ற தாமதம் செய்வது குறித்து உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் மிகவும் முக்கியமானவை. ஆளுனர் விரைந்து முடிவெடுக்காவிட்டால் உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுக்குமென நீதிபதிகள் விடுத்துள்ள மெல்லிய எச்சரிக்கையை, ஆளுனர் மாளிகை கவனத்தில் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 தமிழர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு பரோல் வழங்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து  தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி சுமார் 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் அதன் மீது ஆளுனர் முடிவெடுக்காதது குறித்து  கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி செய்யப்படும் பரிந்துரைகளில் ஆளுனர் முடிவெடுக்க காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நீதிபதிகள்,‘‘ காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அரசியலமைப்புச் சட்டப்படியான உயர்பதவிகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே காலவரையறை செய்யப்படவில்லை.  இந்த விஷயத்தில் ஆளுனர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால், உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த எச்சரிக்கையை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை; வாய்மொழியாகத் தான் கூறினார்கள் என்றாலும் கூட, அதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையே  மீண்டும், மீண்டும் கூறி காலம் கடத்த தமிழக ஆளுனர் முயன்றால் அதை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிக்காது என்பது தான் தங்களின் கருத்துகள் மூலம் நீதிபதிகள் தெரிவித்துள்ள செய்தியாகும்.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு; அதுகுறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்கீழ் தமிழக அரசு நடவடிக்கை  எடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில்  செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, அன்றே ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் இன்றுடன் 682 நாட்களாகிவிட்ட நிலையில், 7 தமிழர் விடுதலை குறித்து இதுவரை ஆளுனர் முடிவெடுக்கவில்லை.


7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் முடிவெடிப்பது ஒன்றும் கடினமான ஒன்றல்ல. அவர்களின் விடுதலைக்கான காரணங்களையும், அவற்றை அனுமதிக்கும் சட்டப்பிரிவுகளையும் ஆளுனருக்கு அனுப்பிய பரிந்துரையில் தமிழக அரசு தெளிவாக தெரிவித்திருக்கிறது. அவற்றைப் படித்துப் பார்த்தால், இந்த விஷயத்தில் ஒரு சில மணி நேரங்களில் முடிவெடுத்து விட முடியும். ஆனால், எழுவரும் தமிழர்கள் என்பதாலேயே, அவர்களின் விடுதலையை தாமதப்படுத்துவதற்காகவே, ஆளுனர் இவ்வாறு செய்கிறார். தெரிந்தே இதை செய்து விட்டு, முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்ற காரணத்திற்குள் ஆளுனர் ஒளிந்து கொள்கிறார். அதைத் தான் உயர்நீதிமன்றம் இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.


7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுனரின் முடிவு நீதிமன்றத்தால் விமர்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவது குறித்து நீதிபதிகள் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். இது குறித்து விளக்கமளிக்கும்படி  தமிழக அரசுக்கு ஆணையிட்டனர். 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவு எடுக்காதது ஏன்? என ஆளுனரை நோக்கி நேரடியாகவே நீதிபதிகள் வினா எழுப்பியிருக்க முடியும். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சில விஷயங்களில் ஆளுனருக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் தான், ஆளுனரிடமிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடைகளை, தமிழக அரசிடம் மூலம் கேட்டு அறிய விரும்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.


அதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தண்டனை குறைக்கும் பரிந்துரை மீது ஆளுனர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான் என்றாலும், அதையே காரணம் காட்டி 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்போது அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர். இப்போது உயர்நீதிமன்றமும் அதையே வலியுறுத்தியுள்ளது. மேலும் தண்டனைக் குறைப்பு பரிந்துரைகள் மீது முடிவெடுப்பதற்கு காலநிர்ணயம் செய்யப்படாதது ஆளுனருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல; அது உயர்பதவிகள் மீது நம்பிக்கைக் கொண்டு அரசியல் சட்டம் காட்டிய பெருந்தன்மை என்பதையும் உயர்நீதிமன்றம் உணர்த்தியுள்ளது. இதை ஆளுனர் உணர வேண்டும்.


7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக்கோரவில்லை. மாறாக, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள், 30 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை சிறைகளிலேயே இழந்து விட்ட அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது; தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறது. இவ்வளவுக்குப் பிறகு இந்த விஷயத்தில் ஆளுனர் முடிவெடுக்க தாமதித்தால், அதன் பின்னணியில் ஆளுனருக்கு ஏதோ செயல்திட்டம் உள்ளது என்று தான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.


7 தமிழர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை ஆளுனர் மதிக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் இந்திய விடுதலை நாளுக்குள்  அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கும் வகையில் ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதன்மூலம் ஆளுனர் பதவி மீது அரசியலல் சட்டம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.