நாகை: போக்குவரத்துக்கழக கட்டடம் இடிந்து விபத்து; 8 பலி
நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டட இடிபாடுகளில் இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொறையார் போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நாகை ஆட்சியர் தெரிவித்தார்.
பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து 8 ஊழியர்கள் பலியானது குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளிக்க இருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கட்டட விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டனர்.